நாகர்கோவில், அக்.07:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஆன்சுலின் சுஜியிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் பெற்றதாக தவெக நிர்வாகிகள் ராஜேஷ் (27), பாஸ்கர் (58), டெய்சிபாய் (58) ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் பணத்தை வழங்குவதாகவும், அமைச்சரின் உதவியாளர் ஐயப்பன் மூலம் ஒரு வாரத்தில் அரசு வேலைக்கான உத்தரவு பெற்றுத் தருவதாகவும் கூறியதாக ஆன்சுலின் சுஜி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும், அமைச்சர் பிஸியாக இருப்பதாகக் கூறி சந்திக்க முடியவில்லை என்றும், வேலைக்கான தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாகர்கோவிலில் தவெக மாவட்டச் செயலாளரை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி, சாலையிலேயே தங்களை நிற்க வைத்து பின்னர் அவரிடம் பேசியதாகக் கூறி அனுப்பி வைத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும், அரசு வேலை வேண்டாம் எனக் கூறி பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, பணத்தைத் தர முடியாது எனக் கூறியதுடன் தங்களை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து தனது ரூ.15 லட்சத்தை மீட்டுத் தரக் கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆன்சுலின் சுஜி நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.



