சென்னை, நவ. 10 –
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் ( ஏ யூ டி ) மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரேசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் ஏ.யூ.டி தலைவர் காந்திராஜ், செயலாளர் ஏ. சேவியர் செல்வகுமார் பொருளாளர் ஜே. சார்லஸ், எம்யூ.டி.ஏ சங்கத் தலைவர் பி.கே. பெரியசாமி ராஜா, செயலாளர் ஏ.டி. செந்தாமரை கண்ணன், பொருளாளர் ஆர். ராஜா ஜெயசேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் குறித்து ஏ.யூ.டி சங்க பொதுச் செயலாளர் ஏ. சேவியர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இதுவரை 35க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காது இருப்பதை கண்டித்து, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர் தங்களது வலுவான எதிர்ப்புடன் அமைதியான முறையில் போராடுகின்றனர்.
யூஜிசி நெறி முறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்.பில் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்களின் இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்காக பி.எச்டி கட்டாயம் என்பதை தளர்த்திட வேண்டும்.
புத்தொளி மற்றும் புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீடித்து வழங்கிட வேண்டும் . கல்லூரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பதவிக்கான கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை ஆணையினை வழங்கிட வேண்டும். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தினை அமல் படுத்திட வேண்டும். தனியார் பல்கலை கழக திருத்த சட்ட முன்வடிவை முற்றிலுமாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு எட்டும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.



