தருமபுரி, ஜூலை 10 –
தருமபுரி ஒன்றியம் செந்தில் நகரில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடை மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவாசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் அவர் பரிசோதித்து அதன் தரம் குறித்து பணியாளரிடம் கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த மின்னணு தராசுகள் மற்றும் விற்பனை முனைய கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுப்பொருட்களை எடை குறையாமல் வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
இதை தொடர்ந்து நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ. ஜெட்டி அள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒட்டப்பட்டி ரேஷன் கடையையும் ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையில் உணவு பொருட்கள் அனைத்தும் தேவையான அளவிற்கு இருப்பு உள்ளதா? என்பதை அவர் பதிவேடுகள் மூலம் சரிபார்த்து ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க வந்த பொது மக்களிடம் ரேஷன் கடையில் அத்தியாவாசிய பொருட்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டு அறிந்தார்
அப்போது தகுதியின் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அதியவாசிய பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் எந்த வித குறைபாடும் இல்லாமல் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், கூட்டுறவு விநியோகத் திட்ட துணை பதிவாளர் சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



