இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லி, படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவை உலக அரங்கில் பெருமையுடன் தலைநிமிரச் செய்யும் படைப்பு என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்ன ஒரு பிரம்மாண்டமான, அற்புதமான, அசாதாரணமான சினிமா அனுபவம்! ராமாயணம் திரைப்படம் உலக அரங்கில் இந்திய சினிமாவின் பெருமையை உயர்த்துகிறது. பிரம்மாண்டமான கற்பனை இருந்தாலும், நமது கலாசாரம் மற்றும் உணர்வுகளின் வேர்களை அழகாகப் பற்றிக்கொண்டுள்ளது. பல தலைமுறைகளாலும் கொண்டாடப்படும் காலத்தால் அழியாத திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது குழந்தைகளுடன் குடும்பமாகப் பார்த்துக் கொண்டாடவும், தனது தனிப்பட்ட திரைப்படச் சேகரிப்பில் என்றென்றும் பாதுகாத்து வைக்கவும் விரும்பும் திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளார்.

படக்குழுவினருக்கு பாராட்டு
நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பைப் பாராட்டிய அட்லி, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பிரம்மாண்டமான காட்சியமைப்புகளை உருவாக்கிய DNEG நிறுவனத்தையும், ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரையும் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் தொலைநோக்குப் பார்வையையும், இயக்குநர் நிதேஷ் திவாரியின் கடின உழைப்பு மற்றும் செயல்படுத்தும் திறனையும் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
திரைக்கதை எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவனுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்த அட்லி, இந்தியாவின் கதைகள், கலாசாரம் மற்றும் உணர்வுகளை உலகமே வியந்து கொண்டாடும் வகையில் படைக்க முடியும் என்பதற்கு ராமாயணா திரைப்படம் சான்றாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்ததாகவும், அடுத்த பாகத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



