நாகர்கோவில், ஏப். 06 –
நாகர்கோவில் மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து துணை மேயர் மேரி பிரின்ஸி லதா பொறுப்பு மேயரானார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்து வந்த மகேஷ் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த ஏப்ரல் 1ம் தேதி அவர் தனது மேயர் பதவி மற்றும் 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அந்த மேயர் பதவி காலியாக இருந்து வந்ததை அடுத்து தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி, இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சியில் சிறப்பு மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மேயர் மகேஷ்-ன் ராஜினாமா மன்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது. இதன் மூலம் அவரின் ராஜினாமா சட்டப்படி அமலுக்கு வந்தது. எனவே காலியாக இருக்கும் மேயர் பதவியை துணை மேயர் பொறுப்பு மேயராக பதவி ஏற்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து துணை மேயராக இருந்து வந்த மேரி பிரின்ஸி லதாவுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் பொறுப்பு மேராக மேரி பிரின்ஸி லதா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொறுப்பு மேயருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



