கன்னியாகுமரி. செப்.04.
களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி (அஷ்டமி ரோகிணி) விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கேரள கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படுகிறது. கடந்த 31-ம் தேதி தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வாக கிருஷ்ண ஜெயந்தி நாளில் பாரம்பரிய உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணரின் பால்ய கால லீலைகளை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் இந்த உறியடி நிகழ்ச்சி, அப்பகுதியில் “கண்ணன் விளையாட்டு” என்றும் அழைக்கப்படுகிறது. சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமணிந்து, அவரது பால்ய கால விளையாட்டுகளை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். பின்னர் கோவில் வளாகத்தில் உயரத்தில் கட்டப்பட்டிருந்த தயிர் மற்றும் வெண்ணெய் பானைகளை போட்டிப் போட்டுக் கொண்டு அடித்து உடைத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். சிறுவர்களின் உற்சாகமான பங்கேற்பை பக்தர்கள் கண்டு ரசித்ததுடன், கிருஷ்ணரை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், நள்ளிரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



