ஈரோடு, ஜூலை 9 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசு நலத்திட்ட உதவிகளும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும் ஒருங்கினைந்த சேவை மையம் தான் “விழுதுகள்” மையம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெறுவதற்கு இந்தத்திட்டம் வழிவகை செய்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் மொத்தம் 2 ‘விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் நிபுணர்களின் மூலம் தரமான மறுவாழ்வு சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இம்மையங்களில் பிசியோதெரபி. ஆக்குபேஷனல் தெரபி பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை உளவியல் ஆலோசனை, சிறப்புக்கல்வி. கண்பரிசோதனை. உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் எளிதாக பெறும் வகையில் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 18 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான விழுதுகள் சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் தற்போது 11 மையங்களில் செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 7 மையங்களின் கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன.
இந்த வட்டார மையங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உளவியல் ஆலோசனை, பிசியோதெரபி. சிறப்புக் கல்வி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை ஆகிய நான்கு முக்கிய மறுவாழ்வு சேவைகள் அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, 255-க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளர்கள் மாவட்ட முழுவதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களின் தேவைகளை கண்டறிந்து. தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் கிடைக்க வழிகாட்டி வருகின்றனர்.
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தரமான மறுவாழ்வு சேவைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட் ஆட்சியரின் நேர்முக தவியாளர் (பொது) தேன்மொழி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சங்கர் கணேஷ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



