மார்த்தாண்டம், ஜூலை 27 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோர கிராமங்களில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட்டப்பாறை, மருதம்பாறை, குற்றிஆறு, மோதிரமலை உள்ளிட்ட மலையோர பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் உள்ள பண பயிர்களை நாசம் செய்து வருகிறது.
யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் அன்பு தலைமையில் வனத்துறை அதிகாரிகள் குடியிருப்புக்குள் யானைகள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு, பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் தற்போது பலாப்பழ சீசன் என்பதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களில் பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக யானைகள் அதிக அளவில் வந்து செல்வதாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு குற்றியாறு, மோதிரமலை பகுதிகளில் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வந்தன. அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் ஒரு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.
சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்த யானை, ரேஷன் கடை கதவு உடைத்து அங்கிருந்த அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை சாப்பிட்டுள்ளது. மேலும் சில பொருட்களை ரேஷன் கடையில் இருந்து எடுத்து வெளியே வீசி எறிந்துள்ளது. இதற்கிடையில் யானைகளின் அட்டகாசத்தால் கண்விழித்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்று ரேஷன் கடையை பார்வையிட்டு, தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்: யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.



