திருப்பூர், ஜூன் 29 –
கால்நடைத்துறை அமைச்சர் செ.கமலி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் முன்னிலையில், மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் தலைமையில், திருப்பூர் மாநகராட்சி, டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில்
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார்.
கால்நடைத்துறை அமைச்சர் செ.கமலி தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த போலியோ சொட்டு மருந்தானது போலியோ நோயை அறவே ஒழிப்பதற்காக வழங்கப்படுகிறது. இம்முகாமானது திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 972 மையங்களும், நகர்ப்புறங்களில் 214 மையங்களும் என மொத்தம் 1,186 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 23 மையங்கள் மற்றும் 26 நடமாடும் குழுக்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. முகாமிற்கு தேவையான போலியோ சொட்டுமருந்துகள் அனைத்து ஆரம்ப சுகதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 4,752 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணியில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது. பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது.
எனவே, அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான இன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கால்நடைத்துறை அமைச்சர் செ.கமலி தெரிவித்தார்.
இம்முகாமில், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி 2-ஆம் மண்டலத்தலைவர் கோவிந்தராஜ், மாநகர நல அலுவலர் மோகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



