ஈரோடு, ஜூன் 15 –
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவ மாணவிகள் 100 பேருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் இதில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினர். இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் அருண் ராஜ் திடீர் என்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அமைச்சர் அருண்ராஜ் குறைகளை கேட்டார். அப்போது ஒரு பெண் நோயாளி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என்று கூறினார். இதை கேட்ட அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஈரோடு தலைமை அரசு ஆஸ்பத்திரியிலும் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டு பகுதியில் ஆய்வு நடத்தினார். அங்குள்ள கழிப்பறைக்கு சென்று பார்வையிட்ட அவர் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்றும் அமைச்சர் அருண்ராஜ் கேட்டறிந்தார்.



