தஞ்சாவூர், ஜூலை 28 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்க வருகிற 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு இலக்கியம் மற்றும் கல்வி விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல் பொது விவகாரங்கள், அரசு குடிமை பணி, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் பிரிகளிலும் சிறந்த சாதனைகள் செய்வதற்கான இவ்விருது வழங்கப்படுகிறது. இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். பத்ம விருதுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளது.
இவ்விருது வருகின்ற 2027 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையின் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற www.padmaawards. gov.inஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31 ஆம் தேதி வெள்ளிக் கிழமை கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



