மார்த்தாண்டம், செப். 27 –
குமரியில் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் படகுகளுக்கு வழங்கும் மண்ணெண்ணைய் வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கடத்தப்படுவது வழக்கம். இன்று 27-ம் தேதி காலை நித்திரவிளை அருகே விரிவிளை சந்திப்பில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 2 குடிநீர் டேங்குகளுடன் வாகனம் ஒன்று ஒரு டீ கடை முன்பு நின்றது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த போலீசார் வாகனத்தில் இருந்து மண்ணெண்ணெய் வாடை வீசுவதை கண்டு டிரைவரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது மினி டெம்போ டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் மினி டெம்போவில் ஏறி தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது உள்ளே மண்ணெண்ணெய் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் டிரைவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடத்தில் விசாரித்தனர். அப்போது அவர் வழக்கன்பாறை பகுதியைச் சேர்ந்த சுப்பையா (23) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இனயம் பகுதியை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் செப்டிக் டேங்க் கழிவறை அள்ளிச் செல்லும் பிளாஸ்டிக் கேனுக்குள் சிறிய அளவிலான மண்ணெண்ணெய் கேன்களை வைத்து கேரளாவுக்கு கடத்தி கொடுத்தால் அதிகமான வாடகை தருவதாக கூறியுள்ளார். இதற்காக பூவார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (23) என்பவரை அறிமுகப்படுத்தியதாகவும், அதன் பிறகு வாரத்தில் 4 நாட்கள் இனயம் பகுதியில் இருந்து மண்ணெண்ணெய் ஏற்றிக்கொண்டு பூவார் பகுதியில் உள்ள ராஜேந்திரன் வீட்டில் கொண்டு கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதற்கு சுப்பையாவுக்கு ரூ 4 ஆயிரம் வாடகை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு டேங்கர் கேன்களில் மண்ணெண்ணையை பதுக்கிக்கொண்டு செல்லும்போது ரோந்து போலீசாருக்கோ, சோதனை சாவடி போலீசாருக்கோ சந்தேகம் ஏற்படவில்லை. அதனால் வழக்கம்போல் நேற்றும் ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் கடத்திக்கொண்டு பூவார் செல்லும் போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். போலீசார் டிரைவர் சுப்பையாவை கைது செய்ததுடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் மற்றும் ராஜேந்திரன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



