நாகர்கோவில், மே 19 –
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (49). லோடுமேன் வேலை பார்க்கிறார். கடந்த 10ம் தேதி இவர் தனது மனைவி சரிதாவிடம் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் பெரியசாமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரது மனைவி, குடும்பத்தார் தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில், நேற்று காலையில் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் உள்ள ஒரு லேப்டாப் விற்பனை கடை முன் வாசலில் பெரியசாமி இறந்த நிலையில் கிடந்தார்.
இது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பெரியசாமி இறப்பதற்கு முன் தனது செல்போன், மணி பர்ஸ் ஆகியவற்றை அந்த பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வராஜ் கொடுத்த தகவலின் பேரில் பெரிய சாமியின் குடும்பத்தினரும் சம்பவத்திற்கு வந்தனர்.
பெரியசாமி எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது இறப்புக்கு வேறு காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


