கிருஷ்ணகிரி: செப்.02.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டி கிராமம் பக்கிரிபாய் நகர் பகுதியில் உள்ள ஜே.கே.365 தென்னை ஆராய்ச்சி மையத்தில், உலக தென்னை தினத்தையொட்டி தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் ந.இளையராஜா முன்னிலையில் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கண்காட்சியில் தென்னை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தென்னை விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் கூடுதல் வருவாய் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கா.உமா, தோட்டக்கலை இணை இயக்குநர் (பொறுப்பு) ஜெ.குணவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பா.ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் தோ.சுந்தர்ராஜ், அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்க தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் ஜே.கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



