தூத்துக்குடி, ஜூலை 03 –
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முன்னிலையில் நடந்தது. இதில் மேயர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது: மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் குறை தீர்க்கும் முகாம் சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 2500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வடக்கு மண்டல அலுவலகத்தில் 679 மனுக்கள் பெறப்பட்டு 675 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் மனு கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்து உள்ளது. தூத்துக்குடி முழுவதும் 2500 ரோடுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் போடப்பட்டுள்ளது. தற்போது 997 சாலைப் பணிகள் நடைபெற உள்ளது. தூத்துக்குடியில் 90 சதவீதம் ரோடுகள் போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் முதல் கட்டமாக 5 வார்டுகளில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் குடிநீர் எடுப்பதற்கு மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. 3 மாதங்களுக்கு ரூபாய் 543 குடிநீர் கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் அதற்கு தகுந்த போல் கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால் தேவைக்கேற்ப தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக மேயரிடம் கவுன்சிலர் கற்பக கனி அளித்த மனுவில், தூத்துக்குடி கந்தசாமிபுரத்தில் உள்ள மின் மாற்றியை மாற்றி அமைக்க மாநகராட்சியில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் என்பதால் அனுமதி கொடுக்கக் கூடாது. ஸ்டேட் பேங்க் காலனி இன்னாசியார்புரம், கந்தசாமிபுரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் இன்ஜினியர் தமிழ்ச்செல்வன், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாநகர் நல அலுவலர் சரோஜா, மாநகர் அமைப்பு அலுவலர் ரங்கநாதன், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன், வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், கவுன்சிலர்கள் காந்திமதி, நாகேஸ்வரி, கற்பக கனி, வைதேகி, பவானி, ஜெபஸ்டின் சுதா, சுப்புலட்சுமி, ஜெயசீலி, தேவேந்திரன், ரெங்கசாமி மற்றும் ஆணையரின் உதவியாளர் துரை மணி, மேயரின் உதவியாளர்கள் ஜேஸ்பர் ஞான மார்ட்டின், பிரபாகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.