மார்த்தாண்டம், மார்ச் 10 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 3வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோயில், திற்பரப்பு அருவி ஓரம் உள்ளது. இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோயிலில் தினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தினமும் இலவச அன்னதானம் நடைபெற்று வருகிறது. அன்னதானம் தயார் செய்ய இந்த கோயில் அருகே உள்ள கோயிலுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தண்ணீர் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிணற்றில் கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் செத்து மிதந்தவண்ணம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி துர் நாற்றம் வீசி வருகிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புகார் அளித்தும் உயிரிழந்து மிதக்கும் பாம்பை அகற்றி கிணற்றை இறைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
இதனால் இந்த தண்ணீர் விஷமாக மாறி அன்னதானம் உண்ணும் பக்தர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான சூழல் நீடிக்கிறது. ஆகவே உடனடியாக இந்த பாம்பை அகற்றி கிணற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து உள்ளது.



