திருவனந்தபுரம், மார்ச் 2 –
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கேரள அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. விழாவிற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமை தாங்கி மணிமண்டபம் கட்டுவதற்கான அடிகல்லை நாட்டினார்.
விழாவில் பால பிரஜாபதிஅடிகளார், கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சசிசெரியன், கல்வி அமைச்சர் சிவன் குட்டி, நிதி அமைச்சர் பாலகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேரள மாநில எம்எல்ஏக்கள் பிரசாந்த், ஜாய், அன்சலன், வின்சன்ட் ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கேரள கைவினை பொருள் மேம்பாட்டு கழக தலைவர் ராமபத்திரன் அனைவரையும் வரவேற்றார். கேரள கலாச்சாரதுறை இயக்குநர் திவ்யா எஸ். ஐயர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் அய்யா வைகுண்ட சாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்ட முதல்வருக்கு தமிழகம், கேரள மக்கள் சார்பில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தமிழகத்தின் சார்பில் சிவகாசியில் இருந்து தொழிலதிபர் அதிபன் போஸ், மதுரை தொழிலதிபர் தென்னவன், குளச்சல் டாக்டர் பிரேம்குமார், கொடுங்குளம் ராஜேந்திரன், புளியங்குடி தொழிலதிபர் செல்வ பிரகாஷ், அன்புவனம் நிர்வாகி ஆர். தர்ம ரஜினி, கேரளா தர்மமணி, வினோத், கோமதிஆகியோர் கேரள முதலமைச்சருக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.



