மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு – 43 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
நாகர்கோவில், செப்.11:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு, அவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை கோரி 2 மனுக்களும், அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள 3 மனுக்களும், ஓய்வூதியம் கோரி 2 மனுக்களும் பெறப்பட்டன. மேலும், முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை கோரி 4 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 1 மனுவும், ஆதார் பெயர் திருத்தம் கோரி 5 மனுக்களும் அளிக்கப்பட்டன.
சுயத்தொழில் தொடங்குவதற்கான மானியம் மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சி கோரி அதிகபட்சமாக 25 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 1 மனுவும் என மொத்தம் 43 கோரிக்கை மனுக்கள் முகாமில் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக களஆய்வு மேற்கொண்டு, தகுதியின் அடிப்படையில் காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சமூகநல அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
முகாமில் உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, மாவட்ட சமூகநல அலுவலர் காயத்திரி, தனித்துணை ஆட்சியர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் பத்மபிரியா, பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினத்தவர்களும் திரளாக பங்கேற்றனர்.



