ஈரோடு, ஜூலை 17 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது: ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 768 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 17.07.2026 முடிய 209.4 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 59.62 அடியாகவும். 7.13 மி.கன அடிநீர் இருப்பும் உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் பூச்சிமருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பி.எம்.கிசான் கணக்குடன் நிலம் தொடர்பான விபரங்களை இணைத்தல், ஆதார் விபரங்களை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் தங்களது அடையாளத்தை இணைய வழியில் உறுதிபடுத்துதல் போன்ற விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு அத்திட்டத்தின் பயன்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தோட்டக்கலைத்துறையின் சார்பாக கருத்து கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, 200 கோரிக்கை மனுக்கள் பெற்று மேல் நடவடிக்கைக்காக உரிய அலுவலர்களிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், ஈரோடு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் கலைச செல்வி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



