திருச்சி, ஜூலை 24 –
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (68). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் தமிழ்க்கொடி காலில் கட்டுடன் படுக்கையில் படுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த எலிகள், அவரது காலில் காயம் இருந்த பகுதியைத் தின்று கடித்துக் குதறியுள்ளன. அதீத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு எலிகள் கடித்தது தெரியவில்லை. சக நோயாளிகள் கூறிய பிறகே எலி கடித்தது குறித்து அவருக்கு தெரிந்துள்ளது. இதுகுறித்து மூதாட்டியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தமிழ்கொடியை பரிசோதித்த மருத்துவ குழுவினர் தமிழ்கொடிக்கு எலிகடி தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது.
முன்னதாக, ஒருபுறம் மருத்துவமனையில் நோயாளி எலியால் கடிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில், இச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரையரங்கிற்குச் சென்று ஜனநாயகன் படம் பார்த்த செய்தி வெளியாகி மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. அடிப்படைச் சுகாதாரத்தையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, இத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலத்த கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



