சென்னை, அக்.21:
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் அக்டோபர் 24-ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவரும், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு. கார்த்திகா, அவரது கணவரும் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக. சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை. மதிவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையை ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறையாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, இதற்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி, வரும் சனிக்கிழமை (அக்.24) காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
இதில் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் அனைத்துப் பாசறைகளையும் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், நாம் தமிழர் கட்சியினரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



