தருமபுரி, ஜூலை 21 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு , இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 602 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் பெற்று கொண்டார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் ஒரு நபருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் ஒரு நபருக்கு ஓய்வூதியத் தொகைக் கான ஆணை உள்ளிட்ட நல திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, தருமபுரி உதவி ஆட்சியர் ஜார்ஜ், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஷெர்லி ஏஞ்சலா உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



