தருமபுரி, ஜூன் 28 –
தருமபுரி அருகே நிலங்கள் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். தருமபுரி அடுத்த செட்டி கரை ஊராட்சிக்கு உட்பட்ட கான் காலனி, கொட்டாய் மேடு, ராஜா பேட்டை ஆகிய கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் எங்கள் பகுதியில் சுமார் 103 ஏக்கரில் 160 குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகிறோம். ஆனால் கடந்த மாத இறுதி முதல் குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலங்களின் பத்திரப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 103 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. நாங்கள் பல தலைமுறைகளாக வசிக்கும் இந்த பகுதியில் உள்ள வீடு, நிலம் மற்றும் விவசாய நிலங்களை நம்பி எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் இந்தப் பகுதியில் நிலங்களை பத்திரப்பதிவு செய்துள்ளோம். எனவே பத்திரப்பதிவிற்கு உள்ள தடையை நீக்கவும் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.