தருமபுரி, அக். 2:
தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கம் மற்றும் கல்வி சார்ந்த நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இயற்பியல் பாடத்தைப் படிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் அப்பாடத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோ. பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மு. சந்தோஷ்குமார், மாணவர்களுக்கு இயற்பியல் மற்றும் தமிழின் சிறப்புகள் குறித்தும், பல்வேறு நல்ல அறிவுரைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினர். தொடர்ந்து, மாணவர்களுக்காக நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இயற்பியல் துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பிற மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



