தருமபுரி, ஜுன் 28 –
தருமபுரியில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். தருமபுரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிராக காவல்துறையின் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அரசு கல்லூரியை சென்றடைந்தது. இதில் மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும், அதிலிருந்து மீண்டு வருவதை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல்துறையின் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது.
இந்த ஊர்வலத்தின் போது போதை பொருட்களால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீண்டு வருவது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் துறையின் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற போதை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க அரசு துறை அலுவலர்கள், காவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் வாசித்து ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலால் உதவி ஆணையர் நர்மதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன், பாலசுப்பிரமணியன் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், அரசு துறை அலுவலர்கள், காவல்துறையினர், பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.