தஞ்சாவூர், ஜூலை 29 –
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு முன்னுரிமை அளித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஜெகாவத் தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்தவர் அரண்மனையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்தார். அவரை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.
பின்னர் பெருவுடையாரை தரிசனம் செய்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கோவிலில் உள்ள கல்வெட்டுகள், ஓவியம், சிற்பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து பெரிய கோவிலில் கலாச்சார துறை சார்பில் பெரிய கோவிலின் கட்டுமான முறைகள், பெரிய கோவிலின் புகழ் ஆகியவற்றை எழுத்தாளர் அமீஷ் திரிபாதியும் மத்திய மந்திரியும் கலந்துரையாடி அதனை வீடியோவாக பதிவு செய்தனர்.
தொடர்ந்து மத்திய மந்திரி பெரிய கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் கலந்துரையாடினார். உங்களுக்கு பெரிய கோவில் வரலாறு தெரியுமா? இங்கு ஏற்கனவே வந்துள்ளீர்களா? என கேட்டார். பின்னர் சுற்றுலா பயணிகளுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். மத்திய மந்திரியுடன் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலர் சுதானந்தகுமார் காரன், முதுநிலை பராமரிப்பு அலுவலர்கள் சங்கர், ராஜா, உதவி கண்காணிப்பு அலுவலர்கள் முத்துக்குமார், வெற்றிச்செல்வன், காயத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் நிருபர்களிடம் கூறியதாவது:
மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல தஞ்சாவூர் பெரிய கோவில் உலக அளவில் மிகப்பெரிய புராதன சின்னமாக போற்றப்படுகிறது. இது மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இவற்றை பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த கலாச்சார மையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.
இந்த தலங்களுக்கு தொல்லியல் மட்டும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கருதி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு உகந்த தலமாக இருக்கும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.