கோவை, மார்ச் 07 –
காரமடை, டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் வருகின்ற மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.என்.ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கோவை, பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ கே.ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஸ்ரீலதா ஜெகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசிய உரையில், “பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. சாதனை செய்த பெண்களை முன்மாதிரியாக கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் லட்சியப் பாதையை வகுத்துக் கொண்டு பயணம் செய்தால் வெற்றி நிச்சயம். பெண்கள் சமுதாயத்தில் தங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்” என்று மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தமிழ் துறைத்தலைவர் ஜெயந்தி நன்றியுரை கூறினார்.



