ஈரோடு | செப். 23: ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் கர்ப்ப காலத்தை கடந்து, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 15 வட்டாரங்களில் 2,080 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 2026 நிலவரப்படி 8,534 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 15 வட்டாரங்களில் சுமார் 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு தட்டு, பழங்கள், இனிப்பு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் தாய்-சேய் நலம் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. சத்துமாவு, சத்து மாத்திரைகள் உள்ளிட்ட அரசு வழங்கும் ஊட்டச்சத்து உதவிகளை முறையாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாக வளைகாப்பு நடத்த முடியாத நிலையில் இருந்த தங்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக இருப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இதுபோன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.



