கிருஷ்ணகிரி, ஜூலை 31 –
தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் ஜூலை 29 ஆம் தேதி கருப்பு பேட்ச் அணிந்தும், ஜூலை 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “மறு சீரமைப்பு” என்ற பெயரில் செவிலியர் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து 210 செவிலியர் பணியிடங்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றி வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 204-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மருத்துவமனைகளில் ஏற்கனவே கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், பணியிடங்களை மாற்றுவது பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும். மேலும், ஒப்பந்த மற்றும் தற்காலிக செவிலியர்களின் பணி நிரந்தர வாய்ப்பையும் பறிக்கும் என்று செவிலியர்கள் தெரிவித்தனர். எனவே, ஆட்குறைப்பு அரசாணையை திரும்பப் பெற்று, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



