கருங்கல், ஆக. 19 –
குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவர் கிராமத்தில் பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையுடன் இணைந்து கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கி அவர்கள் சுயதொழில் துவங்கும் வகையில் திறன் படைத்தவர்களாக உருவாக்கி வருகிறது.
அதன் ஒருபகுதியாக சைமன் காலனி ஊராட்சிக்குட்பட்ட கோடிமுனை கிராமத்தில் பெண்களுக்கு தேன் உற்பத்தி மற்றும் தேன் மதிப்புகூட்டு விற்பனை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியாளர் மரியதாஸ் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் குறும்பனை, வாணியக்குடி, கோடினை, சைமன் காலனி ஊர்களை சார்ந்த 30 பெண்கள் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முகாமில் தேனீ வளர்ப்பு, தேன் சேகரித்தல், தேனை மதிப்பு கூட்டு பொருட்களாக உருமாற்றுதல், மதிப்புகூட்டு பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.



