நாகர்கோவில், ஜூலை 1 –
தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி மனைவி மரிய அஞ்சலி (66) இன்று காலையில் மயிலோட்டியிலிருந்து வேர் கிளம்பிக்கு அரசு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். இந்த பஸ்ஸில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் நிறுத்தத்தில் இறங்கும்போது மரிய அஞ்சலி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் செயினை காணவில்லை. பஸ்ஸில் கூட்டத்தை பயன்படுத்தி அவரது நகை பறிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து மரிய அஞ்சலி திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தக்கலை அருகே கேரளபுரத்தை சேர்ந்த சங்கர் ஐயர் மனைவி ராஜேஸ்வரி (63) என்பவர் இன்று பிற்பகல் நாகர்கோவில் இருந்து களியக்காவிளை அரசு பஸ்ஸில் ஏறி, தக்கலை பஸ் நிலையம் வந்து இறங்கினார். இந்த பஸ்ஸிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது, ராஜேஸ்வரி கருத்தில் கடந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை காணவில்லை. இது குறித்து ராஜேஸ்வரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் பஸ்களில் கூட்டத்தை பயன்படுத்தி வயதான பெண்களிடம் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர் கதை ஆகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே நாகர்கோவில் சரக பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. மாவட்டத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து திருட்டு கும்பல் ஊடுருவி பயணிகள் போல் கைவரிசை காட்டி வருகிறார்கள். எனவே இதை கண்காணித்து காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனர்.


