நாகர்கோவில், செப்.8-
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், விசாரணை முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், ரோந்து பணிகளை அதிகரிக்கவும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தினார். மேலும், குற்றங்கள் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, அவை நிகழாமல் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, குற்றத் தடுப்பு, விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தருதல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த காவல் நிலையமாக வடசேரி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் சிறப்புக் கேடயத்தை வழங்கி பாராட்டினார். கேடயத்தை நாகர்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் மோகன ஐயர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஜான்சன், குத்தாலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



