கிருஷ்ணகிரி, ஜுலை 2 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கதவனி டோல்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஊத்தங்கரை – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்படும் இந்தச் செங்கல் சூளையில் இருந்து வெளியாகும் புகை மூட்டம், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. இதனால் இருமல், மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சாலை ஓரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், செங்கல் சூளைகள் முறையாகப் புகைபோக்கி அமைத்து புகை விண்ணை நோக்கி மேலே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துக்கும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் செங்கல் சூளைகள் செயல்பட அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.