மதுரை, ஆகஸ்ட் 07 –
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கூத்தியார் குண்டு பாரபத்தி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனக்கன்குளம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரும் இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் இவர்களது மகன் வழிப் பேரன் சிவ நித்திஷ் வயது மூன்று ஆகியோர் கடைக்கு செல்வதற்காக இருசக்க வாகனத்தில் மொட்டமலை பைபாஸ் ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் மகேஸ்வரி நாம் கீழே விழுகப்போகிறோம் என தெரிந்து பேரனை தூக்கி ரோட்டோரம் மண் தரையில் போட்டு விட்டார். அதனால் சிறு காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினார். கீழே விழுந்த மகேஸ்வரி தலையில் லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் லாரியை தேடி வருகின்றனர்.