நாகர்கோவில், செப். 2:
ஆசாரிப்பள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நாகர்கோவில் மண்டல அலுவலகம் சார்பில், நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளிகள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் மருத்துவமனை சேவைகள் மேலும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது. நன்கொடையாக வழங்கப்பட்ட 3 பேட்டரி வாகனங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் லியோ டேவிட், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கிங்ஸ்லி ஜெப சிங், உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



