விளாத்திகுளம், அக்டோபர் 13 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்டூர் பெருமாள் சுவாமி திருக்கோவில் புரட்டாசி உற்சவ திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, சின்னமாடு, பூஞ்சிட்டு என இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, கம்பம், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 68 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
சின்னமாட்டுப் பந்தயத்திற்கு போக வர 6 மையில் தூரமும் பூஞ்சிட்டு பந்தயத்திற்கு போக வர 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழாக்கமட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தினை சாலை நெடுகிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



