நாகர்கோவில், ஜூலை 20 –
கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து பல்வேறு ரயில்வே திட்டங்கள், ரயில் நிறுத்தங்கள், புதிய ரயில்களின் தேவைகள், ரயில்கள் நீட்டிப்பு குறித்து கலந்தாலோசனை செய்தார்.
நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் சேவை, நாகர்கோவில் டவுன் மற்றும் சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு 4 வழி சாலையிலிருந்து இணைப்பு சாலைகள், குழித்துறை ரயில் நிலைய விரிவாக்கம், இரணியல் ரயில் நிலைய பணிகளை விரைவில் முடிக்க வேண்டும், திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, குழித்துறை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து தக்கலை வரை செல்லும் வகையில் பேருந்து வசதி, ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு போன்ற பல கருத்துக்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்ட தொடருக்காக டெல்லி செல்லும் பொழுது அமைச்சர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் இந்த கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் சங்க உறுப்பினர் அல் அமீன், ஸ்ரீராம், எட்வர்ட் ஜெனி, ஜெயகுமார், கிருஷ்ணதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



