பரமக்குடி, ஜூன் 20 –
முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ், வணங்கானந்தல் முதல் பூவிளத்தூர் வரை புதிய சாலை அமைக்கும் பணியினைப் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட போகலூர் ஊராட்சி ஒன்றியம், வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். கிராம மக்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனிடம் புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை எம்.எல்.ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பூவிளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமமூர்த்தி, ஒப்பந்தக்காரர் ராமசாமி மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள் கிராமப் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.