பரமக்குடி, ஜூலை 17 –
பரமக்குடி நகராட்சி பகுதியில் மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற முறையில் தார் சாலை அமைத்ததை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தார் சாலைகள் அமைக்கப்பட்டது. இந்த சாலைகள் மிகவும் சேதமாகிவிட்டது. தார் சாலைகள் கண்டும் குழியுமாக சேதமடைந்து இருப்பதால் வாகனங்களில் சென்று வர பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை அடுத்து பரமக்குடி நகராட்சி பகுதி முழுவதும் ரூபாய் 86 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் பரமக்குடி காமராஜர் நகரில் இன்று தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது சாலை பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், சாலையில் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமலும், பழைய தார் சாலையை அகற்றாமலும் புதிதாக சாலை அமைத்ததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியினை நிறுத்தினர். பழைய தார் சாலையை முழுமையாக அகற்றியும் மின் கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் வைத்து விட்டு புதிய தார் சாலை உறுதி தன்மையுடன் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



