திருப்பூர், செப்.23:
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கையால் கடந்த 10 மாதங்களாக பல டெக்ஸ்டைல் பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களைச் செலுத்தியும் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும் திருப்பூர் டெக்ஸ்டைல் பிரிண்டிங் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சங்கத் தலைவர் ரத்னகுமார் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆர்டர்கள் இருந்தும் மின் இணைப்பு இல்லாததால் 80 முதல் 90 சதவீதம் வரை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.



