தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 21 –
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் தென்காசி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியினர் முதல் இடத்தை பெற்றனர்.
இதன் மூலம் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் முதல் இடம்பிடித்து சாதனை படைத்தது. இதுபோல் சீனியர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளி அணி நான்காவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கால்வின், பள்ளி தலைமை ஆசிரியை அனு ஜெ. பிரீதா, பயிற்சியாளர்கள் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெகன் குமார், தீயணைப்புத்துறை வீரர் அசோக் குமார், கிராம நிர்வாக அலுவலர் சுதன், நந்துமாதவ், அருண், பவித்ரா, லிவின் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.



