ஈரோடு, ஜூலை 29 –
ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோடு செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் இளங்கோ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உதவி தலைவர் முகமது ரபிக் வரவேற்றார். கெளரவ தலைவர் நாராயண சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் சின்னசாமி நிதி நிலை அறிக்கை வாசித்தார். இணை செயலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சொற்பொழிவாளர் நெல்லை கார்த்திகா ராஜா சிறப்புரை ஆற்றினார். செயலாளர் பாலு தீர்மானங்கள் வாசித்தார். முடிவில் உதவி தலைவர் குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: மாநகராட்சியில் ஏற்கனவே நிலவரி, சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, விளம்பர பலகைக்கான வரி, குப்பை வரி மற்றும் தொழில் வரி இவை அனைத்தும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர தற்போது புதியதாக தொழில் உரிமம் டிரேடு லைசென்ஸ் என்ற வரியினை விதித்துள்ளனர். இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு தற்போது 100 சதவீதம் சொத்து வரியை உயர்த்திய பிறகு மீண்டும் வருடா வருடம் 6 சதவீதம் உயர்வு என்பது ஏற்புடையதாக இல்லை. இதனை 3 சதவீதமாக குறைக்க வேண்டும்.
மின் கணக்கீட்டு முறையினை மாதா மாதம் மாற்றி அமைக்கவும், வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டண உயர்வை குறைக்க வேண்டும். சோலாரில் அமை புதிய பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும். கனிராவுத்தர் குளத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அதற்கான பூர்வாங்க பணிகளை துவங்க வேண்டும். மக்களுக்காக தான் அரசு பணி செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து அரசுக்காக மக்கள் இல்லை என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.