பரமக்குடி, செப். 8 –
200 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் புல்வாய்குளம் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா 50க்கும் மேற்பட்ட சிலைகளை பொதுமக்கள் வான வேடிக்கையுடன் கிராமத்திற்கு தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள புல்வாய்க்குளம் கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் சிற்ப கலைஞர்களால் 48 நாள் விரதம் இருந்து சுடு களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட குதிரை, அய்யனார், கருப்பன சாமி சிலை, காளை மாடு, தவழும் பிள்ளை, பைரவர், ராக்கச்சி அம்மன், பேச்சியம்மன், சப்த கன்னிமார்கள், ஐந்து தலை நாகர், கிருஷ்ணன் சிலைகள், கால் பாதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சிலைகளை பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து மேளதாளங்கள், வானவேடிக்கையுடன் புல்வாய்க்குளம் கிராமத்தில் இருந்து 4. கி.மீ. தூரம் உள்ள ஸ்ரீ அய்யனார் கோவிலுக்கு தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் இன்று விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்ய வேண்டியும் இந்த புரவி எடுப்பு விழா கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரவி எடுப்பு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் அசத்தினர்.
அம்மன் கோவில் பொங்கல் விழா மற்றும் ஸ்ரீ அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை காண்பதற்கு முதுகுளத்தூர் சுற்று வட்டாரத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



