ஈரோடு, செப். 8:
பீகாரை போல தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்துவதுடன், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் கள், பதநீர் உள்ளிட்டவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வேண்டும் என்றும், கீழ்பவானி பாசனப் பகுதியில் மீதமுள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கருக்கு செப்டம்பர் மாதத்தில் உயிர் நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், பவானி பாசனப் பகுதிகளில் தொழிற்சாலைகளால் விவசாயிகளுக்கு கழிவுநீர் கிடைப்பதாக குற்றம்சாட்டிய நல்லசாமி, இதுகுறித்த குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார். பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால், காவிரி உரிமை மீட்பு மற்றும் கள் விடுதலை கொள்கையை வலியுறுத்தும் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.



