47 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
நாகர்கோவில், செப்.7-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி, கட்டையன்விளை உள்ளிட்ட மீன் சந்தைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், வடசேரி மீன் சந்தையில் 32 கிலோவும், கட்டையன்விளை மீன் சந்தையில் 15 கிலோவும் என மொத்தம் 47 கிலோ கெட்டுப்போன மீன்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை அழிக்கப்பட்டன.
மேலும், பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது என சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



