கிருஷ்ணகிரி, ஜூலை 11 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள செல்லக்குட்டப்பட்டி ஊராட்சி காட்டு கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு மாணவர்கள் வரும் பாதை தனி நபரது பட்டா நிலம் என்ற நிலையில் இது குறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் 3 அடி நிலம் மீட்டு பாதை அமைத்து கொடுத்த நிலையில் அந்த பாதையை கம்பி வேலி அமைத்து கேட் மூலம் பூட்டி வைத்துள்ளதாகவும் எனவே இந்த பாதையை கூடுதலாக அகலம் கொண்ட பாதை அமைத்து தர வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கிராம மக்கள் பள்ளியின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா மற்றும் பாரூர் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி பாதை அமைக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.