நாகர்கோவில், ஜூலை 8 –
குமரி மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் “நோ ஹெல்மெட், நோ என்ட்ரி” விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் நடக்கும் விபத்துகளில் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான உயிரிழப்புகள் தலைக்காயம் மூலமே நிகழ்கின்றது. மேலும் பைக் விபத்துகள் தான் அதிகம் அரங்கேறுகின்றன.
இதை கருத்தில் கொண்டு தான் “நோ ஹெல்மெட் நோ என்ட்ரி” விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் நள்ளிரவில் பைக் ஓட்டி சென்று விபத்தில் சிக்கி இறக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடக்கின்றன. கடந்த வாரம் நாகர்கோவில் அருகே நள்ளிரவில் பைக் விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக இருந்தனர். இதை அடுத்து போலீசாருக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பைக்கில் வந்தவர் உயிர் தப்பினார். நாகர்கோவில் டதி ஸ்கூல் சந்திப்பில் தக்கலை செம்பருத்தி விளையை சேர்ந்த பெலிக்ஸ் ராஜ் (36) என்பவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் வந்து கொண்டிருந்தார். இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர் டதி ஸ்கூல் சந்திப்பில் இருந்து கோர்ட் ரோட்டில் திரும்பும் சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் பைக்கை இடித்தது. இதில் பைக் காருக்கு அடியில் சிக்கி சுமார் 50 அடி தூரத்திற்கு பெலிக்ஸ் ராஜையும் சேர்த்து இழுத்துச் சென்றது. இதில் பெலிக்ஸ் ராஜுக்கு கை, கால், மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் சாலையில் வேகமாக விழுந்து தலை இடித்த சமயத்திலும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
விபத்து ஏற்படுத்திய பின்னரும் காரில் இருந்தவர் கீழே இறங்கவில்லை. இது குறித்து டிராபிக் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெலிக்ஸ் ராஜ் உயிர் தப்பியது தெரியவந்தது. அவரை பாராட்டி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் இந்த விபத்தில் உயிர்பலி நடக்கவில்லை என போலீசார் கூறினர். எனவே அனைவரும் ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்லுங்கள், ஹெல்மெட் தலையில் மாட்டியதும் முறையாக ‘லாக்’ செய்ய வேண்டும் என்றும் டிராபிக் எஸ். ஐ. சுமித் கூறினார்.
குமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.