கன்னியாகுமரி, ஜன. 9 –
கன்னியாகுமரி அருகே தென் தாமரை குளம் பேரூராட்சி தலைவராக கார்த்திகா (33) என்பவர் இருந்து வருகிறார். நேற்று தென்தாமரைகுளம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக கார்த்திகா தனது கணவர் பிரதாப் (39) என்பவருடன் சென்றிருந்தார். இதை அடுத்து கடையில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரத்தின பாண்டியன் (70) என்பவர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்தார். இதற்கிடையே கார்த்திகாவுக்கும் முதியவருக்கும் கோயிலில் நடந்த பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரேஷன் கடையில் வைத்து ரெத்தினபாண்டியன் திடீரென கார்த்திகாவை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதை தட்டி கேட்ட கணவர் பிரதாப்பையும் அவர் திட்டியதுடன் கணவன் மனைவி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதை அடுத்து கார்த்திகா இது குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண் தலைவர் மற்றும் அவரது கணவரை மிரட்டிய ரெத்தின பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


