திருப்பத்தூர், ஜூலை 22 –
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெலதிகாமணிபெண்டா மலையில் அமைந்திருக்கும் நடுமலை பொன்னியம்மன் கோவிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருவது வழக்கம், இவ்வாறு வரும் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வந்து காப்புக்காடு பகுதிகளில் போட்டு விடுகிறார்கள். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பதை அறிந்த மாவட்ட வன அலுவலர் திரு. மகேந்திரன் அவர்களின் உத்தரவின் பேரில் வாணியம்பாடி வனச்சரகர் குமார், தலைமையில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் வாணியம்பாடி கிளை இணைந்து கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய வனச்சரக அலுவலர் குமார் வனப்பகுதிகளில் பொதுமக்கள் வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள கூடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் வன உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டால் அவற்றின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பிளாஸ்டிக் பொருட்களையோ பிளாஸ்டிக் பாட்டில்களையோ கண்ணாடி பாட்டில்களையோ காப்புக்காடுகளுக்கு கொண்டு வரக்கூடாது என்ற வனப்பாதுகாப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் கோவில் வளாகம் வளாகத்தை சுற்றிய காப்புக்காடுகள், சாலை ஓரங்கள் வீசப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உட்பட கழிவுகள் வனத்துறை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களால் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய செஞ்சிலுவை சங்கம் வாணியம்பாடி கிளை சேர்மன் வடிவேல் சுப்பிரமணியன், பொருளாளர் பார்த்திபன், மாநில உறுப்பினர் முருகன், வாணியம்பாடி வனவர்கள் சங்கர், சம்பத்குமார், நாட்றம்பள்ளி கிளை சேர்மன் விஜய்ஆனந்த், பூமணி பவுண்டேஷன் ரவிந்திரன் சுப்ரமணியன், நீதியின் செங்கோல் அமைப்பு திருநங்கை ஈஸ்வரி, ராஜேஷ், சிவசங்கரி, க்ரெஸ்ட் இந்தியா சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்க மாட்டோம். காப்புக்காடுகளை பாதுகாப்போம். காப்புக்காடுகளில் வாழும் உயிரினங்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக செல்ல மாட்டோம். வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளையும் தண்ணீர் பாட்டில்களையும் பயன்படுத்தி வீச மாட்டோம். வனத்தின் பல்லுயிர் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த விஷயங்களையும் செய்ய மாட்டோம். காப்புக்காடுகளுக்குள் உரிய அனுமதி இன்றி அத்துமீறி நுழைய மாட்டோம். இது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.