நாகர்கோவில் மே 16
குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தர்மத்தை காக்க, அதர்மத்தை அளிக்க எம்.ஜி.ஆரால் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேராதரவுடன் எழுச்சியுடன் தொடங்கப்பட்டது. இந்த பேரியக்கத்தை ஜெயலலிதா பாதுகாத்தார். தொடர்ந்து எடப்பாடியார் தலைமையில் கழகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்களே தவிர வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இந்த இயக்கத்தை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிவாளி என நினைத்து அழிவு பாதைக்கு வழி வகுத்து கொண்டிருக்கிறார் தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, யார்? இந்த ரகுபதி என்றால் அ.தி.மு.க-வால் வளர்ந்தவர், அடையாளம் காட்டப்பட்டவர். வாழ்க்கையில் சொத்துக்களை வாரி குவித்தவர். அவர் தனது வளர்ச்சிக்காக சொத்துக்களை சேர்ப்பதற்காக, சொத்துக்களை பாதுகாப்பதற்காக கட்சியினை பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்தின் போது இவற்றை எல்லாம் பாதுகாக்க அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தவர் ஆவார். தற்போது தனது வளர்ச்சிக்கு காரணமான அ.தி.மு.க-வை மறந்து வாய்க்கு வந்தபடி வசைபாடி வருகிறார். ரகுபதியின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போமானால், புதுக்கோட்டையில் 1991-ம் ஆண்டுக்கு முன்னர் எப்படி இருந்தார். அவரது சொத்து மதிப்பு என்ன என்பது நாடறிந்த உண்மை. இது அந்த மாவட்ட மக்கள் அனைவருக்குமே தெரியும். அந்த அளவுக்கு பொருளாதார அளவில் வீழ்ச்சியில் இருந்தார். 1991-1996-ம் ஆண்டில் அம்மா ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டிற்கு பிறகு முதலாவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், அதனையடுத்து வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். அவர் அமைச்சராக இருந்த போது அம்மா பெயரில் ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரியினை தொடங்கினார். இது நாடறிந்த உண்மை. 1996-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக இடைத்தேர்தல் வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பயந்து தி.மு.க-வை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒழிந்தவர்தான் இந்த ரகுபதி தி.மு.க ஆட்சி காலத்தில் அன்றைய முதலமைச்சர் மறைந்த கருணாநிதி இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துவிட்டார் என லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் சொத்து குவிப்பு வழக்கும் தொடரப்பட்டது. சென்னைக்கு அருகில் மருத்துவக் கல்லூரியினையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளையும் தனது குடும்ப உறுப்பினர்களான மகன், மகள் பெயரில் தொடங்கினார் என்ற கணக்கின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவர் அ.தி.மு.க-வை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர். தி.மு.க-வில் தற்போதைய உட்கட்சி பூசலை மூடி மறைப்பதற்கும், முதலமைச்சரை திருப்தி படுத்துவதற்கும் அ.தி.மு.க-வை பற்றி அவதூராக பேசி வருகிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை பார்க்கையில் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கும், சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும், கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கும் அ.தி.மு.க-வை இவர் பயன்படுத்தி கொண்டார். இன்று இவற்றை எல்லாம் மறந்து போலித்தனமாக, மனசாட்சிக்கு விரோதமாக, நீதிக்கு முரணாக பேசி வருகிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தார். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்ச ஒழிப்பு துறையை நிர்வகிக்கும் அமைச்சர் பதவியை ரகுபதிக்கு கொடுத்துள்ளார். இது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தப்பிக்க, சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மகன், மகள் பெயரில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களை தொடர்ந்து பாதுகாக்க, அ.தி.மு.க-விற்கு துரோகம் செய்த இவர் இறைவனால் தண்டிக்கப்படுவார். முதலமைச்சரை திருப்தி படுத்துவதற்கு பொய்யான தகல்களை கூறி முகத்தில் கரியை பூசிக் கொள்கிறார். பதவிக்காகவும், பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் திசைமாறும் கூட்டங்கள் விரைவில் காணாமல் போய்விடும். என தளவாய்சுந்தரம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.